செல்போன் கோபுரத்தில் ஏறி 2-வது நாளாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்பு

செல்போன் கோபுரத்தில் ஏறி 2-வது நாளாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்கப்பட்டார்.

Update: 2021-06-24 19:26 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன்(வயது 26). இவர், ஒரு பெண்ணை காதலித்தார். இவரது காதலுக்கு இருவீட்டார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம் காரைக்குறிச்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை, தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பிளேடால் கைகளில் கிழித்துக்கொண்ட நிலையில் இருந்த அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று அங்கிருந்து தப்பி வந்த வீரமணிகண்டன் காரைக்குறிச்சியில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏரி அமர்ந்து கொண்டு, அவரது காலில் பிளேடால் கிழித்துக்கொண்டார். பின்னர் வாட்ஸ்-அப் மூலம் தனது காதலிக்கு உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், வீரமணிகண்டனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் வீரமணிகண்டன் செல்போனில் பேச தயாராக இல்லை. காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விமல், முத்து ஆகிய 2 இளைஞர்கள் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்று வீரமணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த இளைஞர்களின் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பேசியபோது, தான் காதலிக்கும் பெண்ணை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கீழே இறங்க மாட்டேன் என்றும் வீரமணிகண்டன் மிரட்டல் விடுத்தார். காரைக்குறிச்சி கிராம மக்கள் செல்போன் கோபுரம் அருகே திரண்டனர். இதற்கிடையில் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீத்தடுப்பு அதிகாரி மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரவிச்சந்திரன், சரவணகுமார் ஆகிய 2 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு சாதனங்கள், கயிறுடன் செல்போன் கோபுரத்தின் உச்சிக்குச் சென்றனர். வீரமணிகண்டன் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராஜேஷ், செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று வீரமணிகண்டனை அழுத்திப் பிடித்துக்கொள்ள தீயணைப்பு வீரர்கள் அவரது இடுப்பை கயிற்றால் பாதுகாப்பாக கட்டினர். இதையடுத்து ராஜேஷ், வீரமணிகண்டனை தனது தோளில் தூக்கிக் கொண்டு படிகள் வழியாக இறங்கி வந்தார். அவர் மயங்கி நிலையில் இருந்ததால், அவரை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். காதல் தோல்வி காரணமாக அடுத்தடுத்து 2 நாட்களில் வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்