திருச்சியில் 17 ஆண்டுகளாக வெட்டியான் பணி: மயான பூமியில் அச்சமின்றி பிணங்களை எரிக்கும் பெண்

திருச்சி மயான பூமியில் அச்சமின்றி பிணங்களை எரிக்கும் வெட்டியான் பணியை 17 ஆண்டுகளாக மாரியாயி என்ற பெண் செய்து வருகிறார்.

Update: 2021-06-24 19:17 GMT
திருச்சி,

புராண, இதிகாச காலம்தொட்டு மயானங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையே நாட்டில் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் இந்து மதத்தை பொறுத்தவரை ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருகிறார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி. 

சுடுகாட்டில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடல் தீ நாக்குகளின் இரையாவதற்கு முன்பாக அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் உடல்களை எரிக்கும் வெட்டியான் பணியில் அச்சமின்றி துணிச்சலாக ஈடுபட்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த 60 வயது பெண் மாரியாயி. இவரை அந்த பகுதி மக்கள் பிதாமகள் என்றே அழைக்கிறார்கள்.

திருச்சி மாநகராட்சி பகுதி எடமலைப்பட்டிபுதூர் கோரையாற்றங்கரையில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் சுடுகாடு உள்ளது. உடல்களை புதைப்பதற்கும் இங்கு இடவசதி உள்ளது. இந்த சுடுகாட்டில் தான் கடந்த 17 வருடங்களாக இந்த பணியை செய்து வருகிறார் மாரியாயி. இந்த பணிக்கு தான் எப்படி வந்தேன் என்பதை அவரே கூறுகிறார். 

எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இரண்டாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளேன். எனது கணவர் பெயர் முத்தையா திருமணத்திற்கு பின்னர் நாங்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதிக்கு வந்துவிட்டோம்.

எனது கணவர் கோரையாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வந்தார். அவர் இறந்த பின்னர் குடும்பம் வறுமையில் வாடியது வறுமையை வெல்ல ஏன் நாமும் கணவர் விட்டுச் சென்ற பணியை தொடர கூடாது என நினைத்தேன். அதன் விளைவாக நான் ஏற்றுக்கொண்டது இந்த பணி. அன்று தொடங்கிய பணி தான் இன்றுவரை தொடர்கிறது.
இந்த வேலையிலும் நிறைய போட்டி இருக்கிறது. நான் இந்த சுடுகாட்டு பணியை தொடங்கிய போது ஆண்கள் பலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். உடல்களை புதைப்பதற்கு மட்டும் வயது முதிர்வின் காரணமாக தற்போது உதவியாளர் ஒருவரை வைத்திருக்கிறேன் என்றார் மாரியாயி.

தற்போது வரை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோடு பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வரும் மாரியாயி தனக்கு வருமானத்திற்கு பிரச்சினை இல்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த கோரிக்கையும் இல்லை என்று கூறுவதோடு அவர் வைத்திருக்கும் ஒரே கோரிக்கை கோரையாறு சுடுகாட்டை நவீனப்படுத்த வேண்டும். கூடுதல் இடம் ஒதுக்கி அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான். வெட்டியான் வேலை செய்தாலும் அந்த பணியில் கூட சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்ததாகவே உள்ளது.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த கடந்த மே மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட உடல்களை எரியூட்டி இருப்பதாக குறிப்பிட்டார், மாரியாயி. கொரோனா அறிகுறியுடன் இறந்தவர்களின் உடலை கூட தொட்டு, குளிப்பாட்டி கை, கால்களை கட்டி அதன் பின்னர் சிதையில் படுக்கவைத்து எரித்ததாகவும் கூறுகிறார் அவர். இத்தகைய துணிச்சல்மிக்க மாரியாயி கொரோனா முதல் அலையின் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 15 நாள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிருடன் மீண்டது தனிக்கதை.

திருச்சி மாவட்ட நிர்வாகம் வீரப் பெண்மணி கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சி பயணத்தின்போது உயிர்நீத்தார். இந்த பிதாமகள் மாரியாயியோ ஆண்களே செய்வதற்கு தயங்கும் சுடுகாட்டு பணியை அச்சமின்றி துணிச்சலோடு செய்து வருவதால் அவருக்கு வீரப் பெண்மணி விருது வழங்க வேண்டும் என்பது எடமலைப்பட்டிபுதூர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்