சிறப்பு மருத்துவ முகாம்
அய்யம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
தரகம்பட்டி
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர்மலை ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி உயர்நிலைப்பட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது நீண்ட வரிசையில் சமூக இடைவெளியடன் காத்திருந்த மக்களையும் சந்தித்து பேசினார். பின்னர் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் செயல்படாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்டு, இதனை கவனிக்க தவறிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடவூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.