6-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
ஈத்தாமொழி அருகே படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் கூறியதால் 6-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஈத்தாமொழி:
ஈத்தாமொழி அருகே படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் கூறியதால் 6-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
6-ம் வகுப்பு மாணவி
ஈத்தாமொழி அருகே கொடிக்கால் காலனியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 38) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிகா (35). இவர்களது மகள் தனலட்சுமி (11). ஈத்தாமொழி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலேயே இருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்றும் படிப்பில் கவனம் செலுத்துமாறும் மாணவியின் தாயார் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பதற்றத்தில் இருந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த செடிகளுக்கு தெளிக்கும் பூச்சிகொல்லி மருந்தை குடித்து விட்டு தூங்க சென்றார்.
பரிதாப சாவு
நள்ளிரவில் திடீரென மாணவி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 6-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.