ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற மினி லாரி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது-டிரைவர், கிளீனர் காயம்

ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற மினி லாரி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் லேசான காயம் அடைந்தனர்.

Update: 2021-06-24 19:02 GMT
வெண்ணந்தூர்:
மினி லாரி கவிழ்ந்தது
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் கோபி (வயது 25). இவர் நாமக்கல் மாவட்டம் கிழக்கு வலசு பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான மினி லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கோபி நேற்று அதிகாலை கோம்பைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜல்லி ஆலையில் இருந்து மினி லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு தச்சன்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடன் சுரேஷ் என்பவர் கிளீனராக உடன் சென்றார்.
அப்போது வழியில் முருகன்காடு என்ற இடத்தில் குறுகிய வளைவில் மினிலாரி திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் கோபி, கிளீனர் சுரேஷ் ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடம் மிகவும் குறுகிய வளைவு ஆகும். மேலும் இந்த வளைவு மலை இறக்கத்தில் உள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் அங்கு விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்