கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்-தேடும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-24 18:04 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மீனவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தாளாப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 46), மீனவரான இவர் கிருஷ்ணகிரி அணையில் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு, பரிசலில் சென்று மீன் பிடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மீன் பிடிக்க வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவர், பரிசலில் அணைக்குள் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்  வீடு திரும்பவில்லை. வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தேடும் பணி
இந்த புகாரின் பேரில் போலீசார் அணைக்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் மோட்டார் படகில் நேற்று மதியம் முதல் மாலை வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் முனியப்பனோ, அவர் சென்ற பரிசலோ கிடைக்கவில்லை.
நேற்று மாலை வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தேடும் பணி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்