தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மேளதாளத்துடன் வந்த நாட்டுப்புற கலைஞர்கள்- ஊரடங்கால் வறுமையில் வாடுவதால் நிவாரண உதவி வழங்க கோரிக்கை
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மேளதாளத்துடன் வந்த நாட்டுப்புற கலைஞர்கள், ஊரடங்கால் வறுமையில் வாடுவதால் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மேளதாளத்துடன் வந்த நாட்டுப்புற கலைஞர்கள், ஊரடங்கால் வறுமையில் வாடுவதால் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
கோரிக்கை மனு
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைகளில் ஈடுபடும் 1000 கிராமிய கலைஞர்கள் உள்ளோம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இந்த நாட்டுப்புற கலை சார்ந்த எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேளதாளத்துடன்...
இதனால் எங்கள் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உரிய வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராமிய நாட்டுப்புறக்கலைஞர்கள் வறுமையில் வாடும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேவையான நிவாரண உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பரிந்துரையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நாட்டுப்புற கலைஞர்கள், மேளதாளங்கள் முழங்க நாட்டுப்புற கலை சார்ந்த உடைகளை அணிந்து வந்து மனு அளித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.