ஊரடங்கை மீறி வியாபாரம் பெண்ணாடத்தில் ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ தாசில்தார் நடவடிக்கை

பெண்ணாடத்தில் ஊரடங்கை மீறி வியாபாரம் செய்த ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2021-06-24 17:47 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் கடைவீதி கிழக்கு மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெற்று வருவதாக திட்டக்குடி வருவாய்த்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி  தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜவுளிக்கடை பின்பக்க கதவை திறந்து வைத்து வியாபாரம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் ஜவுளி வாங்க கடைக்கு வந்தவர்கள் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


பாத்திரக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

இதேபோல்  கடலூர் முதுநகர் காசுக்கடை தெருவில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி பாத்திரக்கடை திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் தாசில்தார் பலராமன் தலைமையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கர், சக்திவேல் மற்றும் கடலூர் முதுநகர் போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற பாத்திரக்கடைக்கு விரைந்து சென்றனர். 

அப்போது அங்கு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 அதைத்தொடர்ந்து பாத்திரக்கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, மீண்டும் கொரோனா விதிமுறைகளை மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்