குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது.

Update: 2021-06-24 17:43 GMT
குன்னூர்

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தை சாவு

குன்னூர் அருகே மேல் டேரேமியா என்ற கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் மேல் டேரேமியா கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் விசாரணை 

தகவல் அறிந்த குந்தா வனத்துறை உதவி வன பாதுகாவலர் ராஜேஸ் மற்றும் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் ராஜா, நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து இறந்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிறுத்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இறந்தது 9 மாத பெண் சிறுத்தை ஆகும். சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளன. எனவே பிற வனவிலங்குகள் தாக்கியதால் சிறுத்தை இறந்திருக்கலாம் என்றனர்.

மேலும் செய்திகள்