நாடுகாணி தாவரவியல் பூங்காவில் மீன் கண்காட்சியகம் அமைக்கும் பணி மும்முரம்

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் மீன் கண்காட்சியகம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-06-24 17:43 GMT
கூடலூர்

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் மீன் கண்காட்சியகம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாவரவியல் பூங்கா

கூடலூர் கோட்ட வனத்துறைக்கு சொந்தமாக நாடுகாணியில் தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அழிவின் பிடியில் உள்ள தாவரங்கள், மூலிகைகள், ஒட்டுண்ணி செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தவிர பெரணி செடிகளின் இல்லம், திசு வளர்ப்பு மையம், வன விலங்குகளின் உடற் பாகங்களை கொண்ட கண்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த கல்வி சுற்றுலா மையமாக திகழ்கிறது.
கடந்த காலங்களில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே தாவரவியல் பூங்காவை காண வனத்துறையினர் அனுமதி அளித்து வந்தனர். 

பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு தாவரவியல் பூங்காவை காண சுற்றுலாப் பயணிகளுக்கு சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

அழியும் மீன் இனங்கள்

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பூங்காவின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் சுற்றுலா பயணிகளை கவரவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் புல்வெளியில் புலி உள்ளிட்ட வன விலங்குகளின் உடல் அமைப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வனவிலங்குகளின் கண்காட்சியகம் போல் கூடலூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வாழக்கூடிய மற்றும் அழிவின் பட்டியலில் உள்ள மீன்களை பாதுகாக்கும் வகையில் கண்காட்சியகம் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கண்ணாடி தொட்டிகளில் பராமரிப்பு

கூடலூர் பகுதியில் நாளுக்கு நாள் ரசாயன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகள் மாசு அடைந்து இயற்கையாக வளரக்கூடிய மீன்கள் இனம் அழிந்து வருகிறது. இதனால் முதற்கட்டமாக அழியும் பட்டியலில் உள்ள மீன்களை கண்டறிந்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து மீன் கண்காட்சியகம் அமைக்கப்பட்டு கண்ணாடி தொட்டிகளில் அழிந்து வரும் மீன்கள் இனத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சியகத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்