ஊட்டி அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டிய நில உரிமையாளர் மீது வழக்கு

ஊட்டி அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக நில உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-06-24 17:43 GMT
ஊட்டி

ஊட்டி அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக நில உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வனஊழியர்கள் பணியிடை நீக்கம்

நீலகிரி வன கோட்டம் நடுவட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சில்வர் ஓக் மரங்களை வெட்டி அகற்ற கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அனுமதி பெறப்பட்டது. 

தொடர்ந்து சில்வர் ஓக் மரங்களை வெட்டியதோடு மட்டுமல்லாமல், நாவல், தேக்கு, செண்பகம், விக்கி போன்ற சோலை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதைதொடர்ந்து அனுமதியின்றி மரங்கள் வெட்டியதை கண்காணிக்க, கவனிக்க தவறிய நடுவட்டம் வனச்சரகர்களாக பொறுப்பு வகித்து வந்த சிவா, குமார் மற்றும் வனவர் தரும சத்தி, வனக்காப்பாளர் நர்சீஸ் குட்டன் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நில உரிமையாளர் மீது வழக்கு

மாவட்ட குழுவின் அனுமதிக்கப்பட்ட மரங்களை தவிர இதர மரங்களை வெட்டக்கூடாது. மேலும் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் தனியார் நிலங்களில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

 இதனால் அந்த பகுதி வெட்ட வெளியாக உள்ளது. இதற்கிடையே அனுமதியின்றி மரங்களை வெட்டி அகற்றியதாக கூடலூரை சேர்ந்த நில உரிமையாளர் கோயல்லா மீது தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து நீலகிரி வன அதிகாரி குருசாமி கூறிய தாவது:- நடுவட்டம் பகுதியில் 2018-ம் ஆண்டு தனியார் பட்டா நிலத்தில் 500 சில்வர் ஓக் மரங்கள் வெட்ட அனுமதி பெறப்பட்டது. ஆனால் 200 சோலை மரங்களும் அனுமதியின்றி வெட்டப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நில உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த நிலத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர்களிடமும் மற்றும் மரம் வெட்டும் ஒப்பந்தராரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இதில் அவர்களுக்கு தொடர்பு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்