மதுபாட்டில்கள் வாங்க திரண்டதால் கடலூரில் ராணுவ கேண்டீனுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை

மதுபாட்டில்கள் வாங்க முன்னாள் ராணுவ வீரர்கள் திரண்டதால் கடலூர் ராணுவ கேண்டீனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-06-24 17:42 GMT
கடலூர், 

கடலூர் புதுப்பாளையத்தில் என்.சி.சி. கடற்படை பிரிவு -ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இந்த கேண்டீனில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை வாங்கி சென்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இந்த ஒரே ஒரு கேண்டீன் மட்டுமே செயல்பட்டு வருவதால் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நேரங்களில், குறிப்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் போது அதிக அளவில் கூட்டம் இருக்கும். அதாவது இந்த கேண்டீனில் 4 ஆயிரம் பேர் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். 

மது வாங்க திரண்டனர்

இந்த கேண்டீனில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் முழு ஊரடங்கு போடப்பட்டதால் கேண்டீனில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படவில்லை. இதையடுத்து இந்த மாதத்திற்கான மதுபாட்டில்கள் வரவழைக்கப்பட்டு ராணுவ வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று ராணுவ வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை முதலே தொலை தூரங்களில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் திரண்டனர். குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்களே அதிகம் பேர் வந்திருந்தனர்.

திணறிய அலுவலர்கள் 

அதாவது கேண்டீன் 9 மணிக்கு திறக்கப்படும் நிலையில் காலை 5 மணிக்கே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் முன்னாள் ராணுவ வீரர்கள் வரத் தொடங்கினர். இதையடுத்து 9 மணிக்கு 300 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அனைவரும் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு, தனிமனித இடைவெளி இன்றி மதுபாட்டில்கள் வாங்க திரண்டதால் அலுவலர்கள் திணறினர். கேண்டீனுக்கு வெளியேயும் முன்னாள் ராணுவ வீரர்கள் காத்திருந்தனர்.

வாக்குவாதம் 

இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு குழுவினரும், நகராட்சி வருவாய் ஆய்வாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 


பின்னர் அவர்கள் கேண்டீனில் இருந்த அலுவலர்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டத்தை கூட்டி வைக்கக்கூடாது என்று கூறி, ராணுவ கேண்டீனை சீல் வைத்தனர்.

இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் தொலை தூரங்களில் இருந்து வந்திருக்கிறோம். நீங்கள் எப்படி கேண்டீனை சீல் வைக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மதுபாட்டில்கள் வினியோகம்

இதற்கிடையில் தாசில்தார் பலராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கேண்டீன் அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சீல் உடனடியாக அகற்றப்பட்டது.

தொடர்ந்து டோக்கன் முறைப்படி குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியில் அனுப்பப்பட்டனர். உள்ளே இருந்தவர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றவுடன் வெளியில் இருந்தவர்களும் டோக்கன் முறைப்படி சென்று மதுபாட்டில்களை பெற்றுச் சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்