கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 68 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட குட்கா, சாராயம் விற்பனை செய்தல், சூதாடுதல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்ததாக கடலூர் பாதிரிக்குப்பம் சூர்யா வயது (22), பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெரு பாண்டியன் (46), நாகராஜ் (47), பண்ருட்டி பிரகநாதன் (30), சிவா (47), கீழ் அருங்குணம் ராஜதுரை (28), அஞ்சலாட்சி, ஆனந்தராஜ், கண்ணன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக வியாபாரிகள் புதுப்பாளையம் சரவணன், சிதம்பரம் பன்னீர்செல்வம், பண்ருட்டி அவுலியா தெரு இஸ்மாயில், மணிகண்டன், மாஜ்தீன், கலைவேந்தன், புதுப்பேட்டை மோகன், பண்டரக்கோட்டை பாபு, புதுப்பேட்டை கோபால்சாமி, நெல்லிக்குப்பம் காசிநாதன், வரக்கால்பட்டு வெங்கடேசன் ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தவிர சூதாடிய 23 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக பண்ருட்டி சின்னதம்பி, திருத்துறையூர் அப்துல் மஜீத் ஆகியோரையும், மணல் கடத்தியதாக விருத்தாசலம் ஆலிச்சிக்குடி ஹரிஷ்வரன், திருநாவுக்கரசு, பரமசிவன், வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சாராயம் பறிமுதல்
சாராயம் விற்றதாகவும், மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்ததாகவும் 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வாகனம், 118 லிட்டர் சாராயம் மற்றும் மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.