வேலூரில் சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் பறிமுதல்

சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேற்று கடைகளில் சோதனை செய்து பறிசோதனை செய்தனர்.

Update: 2021-06-24 17:24 GMT
வேலூர்

சிரஞ்சுகளில் சாக்லேட்டுகள்

வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் ஊசி போட பயன்படுத்தக்கூடிய சிரஞ்சுகளில் அடைத்த சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த சிரஞ்சுகள் ஏற்கனவே ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தபட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் வேலூர் மாநகராட்சி நல அலுவலர் சித்ரசேனா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையிலிருந்து சிரஞ்சில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வகையான சாக்லேட்டுகள் எங்கே வாங்கப்பட்டது என்பது குறித்து அந்த வியாபாரியிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த வியாபார கடையில் வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

அதிகாரிகள் சோதனை

இதனையடுத்து லாங்கு பஜார், மண்டித்தெரு, மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த ஆண்டு இதுபோன்ற சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு வந்தது தெரியவந்தது. தற்போது இந்த வகையான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வருவதில்லை. இதுபோன்ற அபாயகரமான சாக்லேட் தின்பண்டங்களை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மொத்த வியாபார கடைகளில் இந்த சோதனை நடந்தது.

பறிமுதல்

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் மார்க்கெட் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு கடையில் 10 சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற சாக்லேட்டுகள் வேலூரில் தயாரிக்கப்படவில்லை. சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளது. 

இந்த சாக்லேட்டுகள் அடைத்து வைத்திருக்க கூடிய சிரஞ்சுகள் ஒரிஜினல் இல்லை. அவற்றில் அளவீடுகள் மற்றும் ஊசி பொருத்துவதற்கான முனைகள் இல்லை. இந்த சிரஞ்சுகள் சாக்லேட் வைப்பதற்காக தனியாக தயாரிக்கப்பட்டவை. இதுபோன்ற சாக்லேட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருந்துகள் அடைக்கப்பட்ட சிரஞ்சுகளா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்