பணித்தள பொறுப்பாளராக தி.மு.க. பிரமுகர் நியமனத்தை கண்டித்து முற்றுகை
கூத்தம்பாக்கம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக தி.மு.க. பிரமுகர் நியமிக்கப்பட்டதை கண்டித்து 100 நாள் வோலைதிட்ட தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;
அணைக்கட்டு
தி.மு.க. பிரமுகர் நியமனம்
குடியாத்தம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.இவர்களை கண்காணிக்கவும், எத்தனை பேர் வேலைக்கு வந்துள்ளார்கள் என்பதை பதிவேட்டில் பதிவு செய்யவும் பணித்தள பொறுப்பாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு ஒரு ஊராட்சிக்கு 2, 3-க்கு மேற்பட்ட பணித்தள பொறுப்பாளர் பணியில் உள்ளனர்.
கூத்தம்பாக்கம் ஊராட்சியில் பார்கவி, கல்பனா ஆகிய இரண்டு பேர் கடந்த 9 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென நேற்று அவர்கள் 2 பேரையும் நீக்கிவிட்டு, தி.மு.க. பிரமுகரான சிலம்பரசன் என்பவரை பணித்தள பொறுப்பாளராக நியமித்து உள்ளனர்.
தொழிலாளர்கள் முற்றுகை
நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். அப்போது புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பணித்தள பொறுப்பாளர் சிலம்பரசன் அனைவரையும் பல்வேறு இடங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்களை 5 குழுக்களாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொழிலாளர்கள் ஏற்கனவே இருந்த பணித்தள பொறுப்பாளர் எங்கே, நீங்கள் வந்து எங்களை ஏன் வேலை வாங்குகிறீர்கள் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த முற்றுகை போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது தகவலறிந்ததும் குடியாத்தம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் மற்றும் ஊராட்சி செயலாளர் நிர்மல்குமார் (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தவர்களை நீக்கிவிட்டு தி.மு.க.வைச் சேர்ந்த சிலம்பரசனை பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் மற்றும் ஊராட்சி செயலாளர் நிர்மல்குமார்ஆகியோரையும் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுங்கள், அவர் மேல் அதிகாரியிடம் பேசி பதில் கூறுவார் என்றனர். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.