முதல்-அமைச்சரின் மாநில விருதை பெற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

முதல்-அமைச்சரின் மாநில விருதை பெற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-24 16:56 GMT

விழுப்புரம், 

முதல்-அமைச்சரின் மாநில விருதை பெற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில விளையாட்டு விருது

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்றுனர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சரின் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சமும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது பெற முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்ப்பித்தல் வேண்டும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை முதன்மை செயலாளர், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை- 600 003 என்ற முகவரிக்கு அனுப்பிட விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது தொடர்பாக இதர விவரங்களை அறிய மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (74017 03485) தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரம் பெற சென்னை தலைமை அலுவலகத்தை 044- 28364322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்