மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி
மாவட்டத்தில் 18,000 மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்
விருதுநகர்
மாவட்டத்தில் 18,000 மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பில்லாத நிலையில் அவர்கள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் மேகநாத ரெட்டி விருதுநகரில் உள்ள திருமண அரங்கில் மூன்றாம் பாலினத்தவருக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் செங்குன்றாபுரத்தில் மாற்றுத்திறனாளிகளின ்வீடுகளுக்குச்சென்று தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நடவடிக்கை
அப்போது அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் பயனாக தமிழகத்தில் நோய் பரவல் குறைந்து வருகிறது. மேலும் பொதுமக்களிடையே தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 18,000 பேர் மாவட்டத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 3 லட்சத்து 1,584 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி 72,113 பேருக்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 697 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 263 மூன்றாம் பாலினத்தவர் தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் பதினெட்டாயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
தடுப்பூசி
இவர்கள் அனைவரும் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட வாய்ப்பில்லாத நிலையில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 ஆயிரத்து 620 பேருக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,
எனவே அனைத்து மாற்றுத்திறனாளிகளும், மூன்றாம் பாலினத்தவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதன் மூலமே நோய் பரவலை மாவட்டத்தில் முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.