கோவில்பட்டியில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தமிழ் பேரரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தமிழ் பேரரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல் முருகன் தலைமையில், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நகர மாணவரணி செயலாளர் சரவணன், பொருளாளர் மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் உதவி கலெக்டர் சங்கர நாராயணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி...
கோவில்பட்டி கதிரேசன் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள வீரவாஞ்சி நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 1000-க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். இங்கு மின் இணைப்பு, ரோடு வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, குடிநீர் இணைப்பு, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசு நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
ஆனால் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாததால் கட்டிடம் கட்ட நகரசபை அனுமதி கிடைப்பதில்லை. கட்டிடங்களில் தொழில் செய்ய உரிமம் கிடைப்பதில்லை. கட்டிடங்களை அடமானம் வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முடிவதில்லை. எனவே வீரவாஞ்சி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.