மேல்மலையனூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் மகன் மணிகண்டன் (வயது 24), விவசாயி. இவரும் திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாலந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் அகிலா (21) என்பவரும் காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அகிலா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மணிகண்டனின் தாய் செல்வி (50) அவரை சாதிபெயரை கூறி திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனை மணிகண்டன் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அகிலா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அகிலாவின் தந்தை அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட அகிலாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், திண்டிவனம் சப்-கலெக்டர் மேல்விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.