மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.
வடமதுரை:
வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 21). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பில்லமநாயக்கன்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரிதிவிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து அறிந்ததும் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரிதிவிராஜின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் அருப்பம்பட்டியை சேர்ந்த ரவிக்குமாரை கைது செய்தனர்.