கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆகாசை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்மீரான் (வயது 28). இவர் வாட்டர் கேன் வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நாகூர்மீரான் தனது மோட்டார் சைக்கிளில் வாட்டர் கேனை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த சம்பத்குமார் (55) அவரது நண்பரான ஆகாஷ் ஆகிய இரண்டு பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆகாசை தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் தனபால் (28). நேற்று முன்தினம் இவர்,
காக்களூர் விநாயகர் கோவில் அருகே வந்த போது,அவரை வழிமறித்த நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 950-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.