வெப்படை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்- உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெப்படை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-24 00:48 GMT
பள்ளிபாளையம்,

குமாரபாளையம் தாலுகா வெப்படை அருகே உள்ள பாதரை ஊராட்சிக்குட்பட்ட தோப்புக்காட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மின் கோபுரம் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பாதரை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள், தங்களது குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சங்ககிரி விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமசாமி, தனேந்திரன், வெப்படை தனபால், படைவீடு ராஜா, மேட்டுக்கடை ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது விவசாயிகள் கூறியதாவது:-

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் மகசூல் குறைகிறது. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே பல்வேறு நூற்பாலைகளுக்கு சாலையோரம் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 

இதேபோல் பாதரையிலும் சாலையோரம் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதரையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்