சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4,266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிப்பு
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிக்கப்பட்டது.
ஈரோடு
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிக்கப்பட்டது.
மது கடத்தல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொற்று அதிகம் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதன்காரணமாக சிலர் ரெயில்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, ஈரோடு மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.
சாக்கடையில் ஊற்றி அழிப்பு
இதனை தடுக்க ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது வெளிமாநில மது பாட்டில்கள் வாகனங்களில் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக வெளி மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு மதுபானங்கள் கடத்தி வந்த 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 266 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் உதவி கலால் அலுவலர் குமரேசன் மற்றும் மதுவிலக்கு போலீசார், சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 266 மது பாட்டில்களில் இருந்த 1,100 லிட்டர் மதுபானங்களை சாக்கடையில் ஊற்றி அழித்தனர்.