குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (36). மகள் தீபிகா (6). கடந்த சில மாதங்களாக முருகனுக்கும் அவரது மனைவி உமாவுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக உமா கடும் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் முருகன் வேலைக்கு சென்று விட்டார்.
மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது மனைவி உமா தூக்கில் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். அருகில் மகள் தீபிகா பிணமாக கிடந்தார்.
இது குறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உமா, தீபிகா இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முருகனிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
குடும்பத்தகராறு காரணமாக 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது உள்ளாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.