குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை; மனைவி மாயம்
தென்காசியில் குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவி மாயமானார்.
தென்காசி:
தென்காசி சிந்தாமணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லசிவன் (வயது 36). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுதா (33). எம்.பில்., பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு சுதா தனது கணவரை விட்டு பிரிந்து, மகனை அழைத்துக்கொண்டு மேலகரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த நல்லசிவன் நேற்று முன்தினம் காலை தென்காசி யானை பாலம் அருகில் உள்ள ஒரு தோப்புக்கு சென்று விஷம் குடித்து விட்டார். அவர் தான் விஷம் குடித்ததை உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே அவர்கள் விரைந்து சென்று, அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சுதாவின் தந்தை முருகையா குற்றாலம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ‘எனது மகள் சுதா நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.