அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வினியோகம்

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வினியோகம் தொடங்கியது.

Update: 2021-06-23 21:05 GMT
ாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வினியோகம் தொடங்கியது.
மாணவர் சேர்க்கை
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கும்படி அரசு உத்தரவிட்டது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் தேவையான அளவு ஆசிரியர்கள் பணிக்கு செல்ல வேண்டும் என்றும் அரசு கூறியிருந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதே போல குமரி மாவட்டத்திலும் பிளஸ்-1 மற்றும் 6-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 1200-க்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன. இதில் பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையானது முடிந்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படவில்லை. அதே சமயம் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
பாடப்புத்தகம் வினியோகம்
முன்னதாக குமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கிடையே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதே போல குமரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை முதல் பருவ பாட புத்தகங்களும், 8, 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு ஒரே பாடப்புத்தகமும் வினியோகம் செய்யப்பட்டது. புத்தகமானது மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது "குமரி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. எனினும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. எப்படியும் இந்த வார இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும்" என்றார்.
இதே போல எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் நேற்று மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்