தஞ்சை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை: திருவையாறில், வீடு இடிந்து விழுந்து பெண் பலி கணவர்-தந்தை படுகாயம்

தஞ்சை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலியானார். அவரது கணவரும், தந்தையும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-06-23 20:22 GMT
திருவையாறு:-

தஞ்சை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலியானார். அவரது கணவரும், தந்தையும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பலத்த மழை பெய்தது

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் மிதமான வெயில் அடித்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு பிறகு வானம் இருண்டு காணப்பட்டது.
மதியம் 2.30 மணிக்கு பிறகு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை கொட்டியது. சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக மழை தொடர்ந்து பெய்தது.

வீடு இடிந்து பெண் பலி

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள மருவூர் காலனி தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 70). இவர் தனது மகள் தேவகி(42), மருமகன் கீழமகாராஜபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன்(55) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் 3 பேரும் கடந்த 1991-ம் ஆண்டு கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தேவகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கணவர்-தந்தை படுகாயம்

மேலும் சுப்ரமணியன், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவகியின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்