மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணை நீரை அடிப்படையாக கொண்டு எந்திரங்கள் மூலம் நெல் விதைப்பு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணை நீரை அடிப்படையாக கொண்டு எந்திரங்கள் மூலம் நெல் விதைப்பு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்;
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணை நீரை அடிப்படையாக கொண்டு எந்திரங்கள் மூலம் நெல் விதைப்பு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாரம்பரிய நெல் விதைப்பு
மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் தற்போதைய நிலையில் நமது பாரம்பரிய நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது. அதேநேரத்தில் பாரம்பரியத்துடன் நவீனத்தையும் கலந்து எந்திரங்கள் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எத்தனை நவீன முறைகள் வந்தாலும் மீண்டும் நமது பாரம்பரியத்துக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் விதைப்புக்கு நாற்றங்கால் அமைத்து அதனைப் பராமரிக்கவும், நாற்றங்காலிலிருந்து பிடுங்கி நடவு செய்யவும் அதிக கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. இதனால் அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது. நேரடி நெல் விதைப்பில் கைகளால் நெல்லை தூவுவதை விட எந்திரங்கள் மூலம் சீரான இடைவெளியில் விதைக்க முடிகிறது. இதற்கு மிகவும் எளிமையான உருளை வடிவிலான எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதும் எளிதாக இருக்கிறது.
அதிக மகசூல்
நாற்று நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ வரை நெல் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால் எந்திர நேரடி நெல் நடவு முறையில் 16 கிலோ விதைகள் போதுமானது.ஒரு ஏக்கர் நிலத்தில் 45 நிமிடங்களில் விதைப்பு மேற்கொள்ளமுடியும். மேலும் பயிர்கள் சீரான இடைவெளியில் முளைப்பதால் களை எடுத்தல், உரமிடுதல், பயிர் பாதுகாப்பு போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
பயிர் போட்டியைக் குறைத்து பயிர்களுக்கு சீராக சத்துக்கள் கிடைக்கச் செய்வதால் கதிர்கள் கூடுதலாக வருவதுடன் அதிக மகசூலும் கிடைக்கும். விரைவாக பயிர் வளர்ச்சி பெற்று 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்குத்தயாராகி விடும். தற்போதைய சிக்கலான சூழலில் எந்திரங்கள் மூலம் நேரடி நெல் விதைப்பு முறை எங்களுக்கு பெருமளவு கைகொடுத்துள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.