மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் பலி 2 வாலிபர்கள் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் பலியானார். மேலும் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.;
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் பலியானார். மேலும் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
லாரி மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகர் (வயது28). இவருடைய நண்பர் மஞ்சுநாதன் (27). மெக்கானிக். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது 24 வயது இளம்பெண் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
இதனால் ராஜசேகரும், மஞ்சுநாதனும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி அணை ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜசேகர், மஞ்சுநாதன் படுகாயமடைந்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கொல்கத்தாவை சேர்ந்த அயுப்மண்டலின் மகள் செரீன் என்ற கதுன் (24) என்பது தெரியவந்துள்ளது. செரீன் எதற்காக இங்கு வந்தார்? அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.