ஊட்டியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
ஊட்டியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளால் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி
ஊட்டியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளால் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
விதிகளை மீறும் கடைகள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட வில்லை. இதனால் பழைய தளர்வுகளின் படி அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வருகிறது.
அதன்படி தனியாக செயல்படும் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகளுக்கு பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். புதிய தளர்வுகள் இல்லாத போதும் வியாபாரிகள், அரசின் விதிமுறைகளை மீறி பல கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் தளர்வுகளில் அனுமதிக்கப்படாத கடைகள் விதிகளை மீறி அங்காங்கே திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து அதிகரித்து உள்ளதாகவும், தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தொற்று பரவும் அபாயம்
ஊட்டியில் தளர்வுகளில் அனுமதிக்கப்படாத பேக்கரி, டீ கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் விதிகளை மீறி ஆங்காங்கே திறக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதி கதவை திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஊட்டி நகராட்சி மார்க்கெட், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து உள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே கொரோனா பரவலை தடுக்க அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.