இ-பாஸ் இல்லாமல் காாில் வந்த வாலிபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
இ-பாஸ் இல்லாமல் காாில் வந்த வாலிபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக ஊட்டிக்கு செல்ல சொகுசு கார் வந்தது. இந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரில் வந்த 4 வாலிபர்கள் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் என்பதும், இ-பாஸ் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் சோதனைச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை காருடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், காரின் உரிமையாளர் மன்னார்குடியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் ஓசைமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்து திரும்பி அனுப்பி வைத்தனர்.