சமூக இடைவெளியின்றி காத்திருந்த கர்ப்பிணிகள்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கர்ப்பிணிகள் சமூக இடைவெளியின்றி காத்திருந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வைரஸ் பரவலை மீண்டும் அதிகரிக்கும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றித்திரிகின்றனர்.
குறிப்பாக கர்ப்பகால சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை நடத்தப்படும்.
இதற்காக கர்ப்பிணிகளின் விவரங்கள் மருத்துவமனை ஊழியர்கள் மூலம் பதிவு செய்யப்படும். அதன்படி நேற்று பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணிகள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் முக கவசம் அணிந்திருந்தார்கள் என்றாலும் நீண்ட நேரம் நெருக்கமாக நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் கர்ப்பிணிகள் காத்திருக்கும் இடத்தில் மின்விசிறி வசதி செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளை சமூக இடைவெளியுடன் அமர வைத்து பரிசோதனை, சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.