தாலுகா அலுவலகத்துக்கு வராமல் இணையதளம் மூலம் மனு கொடுக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் ஜமாபந்திக்காக தாலுகா அலுவலகம் வராமல் மனுவை இணையதளத்தின் மூலம் கொடுக்கலாம் என்று கலெக்டர் விசாகன் கூறினார்.

Update: 2021-06-23 15:50 GMT
திண்டுக்கல்: 

ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இந்த முகாமில் ஆத்தூர், போடிக்காமன்வாடி, சீவல்சரகு, பாளையங்கோட்டை, பாறைப்பட்டி, வீரக்கல், கும்மம்பட்டி, வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்ட வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் குறித்து கலெக்டர் விசாரணை நடத்தினார். 

பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

எனவே தற்போது அளித்துள்ளது போல் இணையதளம் மூலமே ஜமாபந்திக்கான மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

 மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அல்லது இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களின் மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


இந்த கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா, ஆத்தூர் தாசில்தார் பவித்ரா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்