சாக்கு மூட்டைக்குள் கிடந்த சூலாயுதம்

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-06-23 11:52 GMT
தேனி:

தேனி சிவாஜி நகர் முதல் தெருவில் எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று அதிகாலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. 

கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், அந்த மூட்டையை திறந்து பார்த்த போது அதற்குள் ஒரு சூலாயுதத்தின் தலைப்பகுதி மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது, அந்த கோவிலுக்கு சொந்தமானது இல்லை என்று தெரியவந்தது.

 மர்மமான முறையில் கிடந்ததால், ஐம்பொன் சூலாயுதமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், யாரோ கடத்தல்காரர்கள் அங்கு வைத்து சென்று இருக்கலாம் என்றும் தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

தேனி வருவாய் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சூலாயுதத்தை போலீசார் கைப்பற்றினர். அது 5 கிலோ 800 கிராம் எடை இருந்தது. அவற்றை பரிசோதித்து பார்த்தனர். 

இதில், அந்த சூலாயுதம் பித்தளை என்று தெரியவந்தது. சூலாயுதம் அங்கு எப்படி வந்தது? யார் கொண்டு வைத்தார்கள்? என்ற விவரங்கள் தெரியவில்லை. 

வேறு ஏதேனும் கோவிலில் இருந்து சூலாயுதத்தை திருடிய மர்ம நபர்கள், சம்பவ இடத்தில் போட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்