வீட்டு உபயோக பொருட்கள் குடோனில் தீ விபத்து
பாவூர்சத்திரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 43). இவர் அந்த பகுதியில் வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பாத்திரங்கள், கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகில் பொருட்கள் வைக்கும் குடோனும் உள்ளது. இந்த குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.