கஞ்சா விற்ற 2 பேர் கைது
தென்காசியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாய்க்கால் பாலம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் லோடு ஆட்டோவில் வந்த தென்காசி எஸ்.கே.பி. தெருவைச் சேர்ந்த முகமது அலி (வயது 31), தென்காசி கீழப்பேட்டை தெருவைச் சேர்ந்த பாதுஷா (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2¼ கிலோ கஞ்சா, லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்போது ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் பலருக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.