கால்வாயில் மூழ்கி பொதுப்பணித்துறை அதிகாரி சாவு

தோவாளையில் கால்வாயில் மூழ்கி பொதுப்பணித்துறை அதிகாரி பலியானார். மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முயன்ற போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2021-06-22 20:59 GMT
ஆரல்வாய்மொழி:
தோவாளையில் கால்வாயில் மூழ்கி பொதுப்பணித்துறை அதிகாரி பலியானார். மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முயன்ற போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
மடையில் அடைப்பு 
திருவட்டார் அருகே சுருளகோடு செல்லன்துறுத்தியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர் பொதுப்பணித்துறையில் நீர்வள பணி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். 
மாவட்டத்தில் தற்போது விவசாயத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தோவாளை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்த ்நிலையில் தோவாளை கால்வாயில் ஆற்றுப்பாலத்தை அடுத்துள்ள பண்ணைவிளை மடையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுப்பணி துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். 
உடல் மீட்பு
அதைத் தொடா்ந்து மடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ராஜேந்திரனும், ஊழியர் ஒருவரும் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று மடையில் பெரிய கல் ஒன்று சிக்கி இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திரன் கால்வாய் தண்ணீரில் மூழ்கி அந்த கல்லை அகற்றினார்.
 உடனே தண்ணீர் வேகமாக வந்ததால், ராஜேந்திரனால் வெளியே வரமுடியவில்லை இதை மேலே நின்று பார்த்த மற்றொரு பணியாளர் ராஜேந்திரனின் கையை பிடித்து வெளியே இழுக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சி செய்து உள்ளார். அதுவும் பலனளிக்கவில்லை. உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் ராஜேந்திரன் தண்ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவண பாபு தலைமையில் நிலைய அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரில் முழ்கிய ராஜேந்திரனை பிணமாக மீட்டனர். இதற்கிடையே தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை நீர்வள துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர் லாரன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 
வழக்குப்பதிவு
இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் உடலை ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் மாரிசெல்வம் ஆகியோர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்