நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் இதர சிகிச்சைகள் தொடங்க ஏற்பாடு

கொரோனா பாதிப்பு குறைந்ததன் எதிரொலியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இதர சிகிச்சைகளை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-06-22 20:24 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு கொரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அங்கிருந்த அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மற்ற நோய் சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி 200-க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட சிகிச்சை பிரிவுகள் அனைத்தையும் மீண்டும் பழைய ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் காலியாக உள்ளது. இதையடுத்து அங்கு வழக்கமான சித்த மருத்துவ சிகிச்சையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 புறநோயாளிகள் பிரிவை தொடங்கவும், உள்நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இங்கு சிகிச்சை தொடங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்