சேலம் தொழில் அதிபரிடம் ரூ.9½ கோடி மோசடி
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி சேலம் தொழில் அதிபரிடம் ரூ.9½ கோடி மோசடி செய்த பெங்களூருவை சேர்ந்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி சேலம் தொழில் அதிபரிடம் ரூ.9½ கோடி மோசடி செய்த பெங்களூருவை சேர்ந்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் கமிஷனரிடம் புகார்
சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவர் ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு வியாபாரம் செய்து வருகிறார். தொழில் அதிபரான அவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதி எனது நண்பர் மூலம் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் ஏற்காட்டில் ஒரு சொகுசு விடுதி கட்டி வருவதாகவும், தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் பணம் டெபாசிட் செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் இரட்டிப்பு பணம் தருவதாகவும் கூறினர்.
சொகுசு விடுதி
இதை நம்பி அவர்கள் ஏற்காட்டில் கட்டிவரும் சொகுசு விடுதியை பார்வையிட்டேன். அந்த நம்பிக்கையின் பேரில் அவர்களிடம் ரூ.9 கோடியே 60 லட்சம் கொடுத்தேன். சில மாதங்களுக்கு பிறகு அவர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் செல்போனை எடுக்கவில்லை.
மேலும் அவர்கள் ஏற்காடு பகுதிக்கு வருவதை தவிர்த்தனர்.அதன் பிறகு அவர்கள் இருவரும் திட்டமிட்டு என்னிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அந்த தம்பதியை கண்டுபிடித்து எனது பணத்தை மீ்ட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு விரைந்தனர்
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூருவை சேர்ந்த தம்பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.