சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை மடக்கிய கலெக்டர்
சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை கலெக்டர் மடக்கி பிடித்தார்.;
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட 3-வது பெண் கலெக்டராக ஸ்ரேயா சிங் கடந்த 17-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார். தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முழு கவச உடை அணிந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வரும் அவர், நேற்று கொல்லிமலைக்கு ஆய்வுக்கு சென்றார். பின்னர் முகாம் அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய அனுமதியின்றி மண் ஏற்றி வருவதை அறிந்த அவர் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த செயல் அனைத்து தரப்பினரிடையே பாராட்டை பெற்றுள்ளதோடு, கீழ்நிலை ஊழியர்களுக்கு சட்ட விரோத செயல்களை தடுக்க ஊக்கம் அளிப்பதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.