தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம்-வேளாண்மைத்துறை அதிகாரி தகவல்
தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.;
பரமத்திவேலூர்:
பரமத்தி வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூன் வண்டுகள்
பரமத்தி வட்டாரத்தில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூச்சிகள், நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருகிறது. தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகள், ஈரியோபைட் சிலந்தி மற்றும் கருந்தலை புழுக்களால் காய்ப்பு தன்மை குறைகிறது. இவை தவிர மிகவும் ஆபத்தான கூன் வண்டு தென்னை மரத்தையே அழித்து விடுகிறது.
பராமரிப்பு இல்லாத தென்னை தோப்புகளை இந்த கூன் வண்டு அதிகளவில் தாக்குகிறது. இந்த வண்டால் பாதிக்கப்பட்ட மரங்களை உடனடியாக வெட்டி, அவற்றை தீ வைத்து எரித்து விட வேண்டும். தென்னையில் கூன் வண்டுகள் முட்டையிடுவதை தடுக்க மலை வேப்பங்கொட்டை தூளை மரத்தின் குருத்து பகுதியிலும், 3-வது மட்டைகளின் கீழ் பகுதிகளும் வைக்கவேண்டும்.
கவர்ச்சி பொறி
பேரொழியர் எனப்படும் கவர்ச்சி, உணவு பொறிகளை 2 எக்டேருக்கு ஒன்று என்ற வீதத்தில் பயன்படுத்தி கூன் வண்டுகளை கட்டுப்படுத்தலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பரமத்தி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி, விவசாயிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.