கண்ணமங்கலம் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை முயற்சி
கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணமங்கலம்
குடும்ப தகராறு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி என்ற அருள்ராஜ் (வயது 30). மினிவேன் டிரைவர். இவருடைய மனைவி புஷ்பலதா (26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சர்வேஷ் (2) என்ற மகனும், சஞ்சனா என்ற ஒரு வயதில் பெண் குழந்தையும் இருந்தனர்.
கடந்த 21-ந் தேதி புஷ்பலதாவின் உறவினர் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என புஷ்பலதா, கணவர் அருள்ராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்று இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தூங்கச்சென்று விட்டனர்.
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புஷ்பலதா நள்ளிரவில் இரு குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார். உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் புஷ்பலதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஒரு குழந்தை தண்ணீரில் இறந்து கிடந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிய புஷ்பலதாவை பொதுமக்கள் கிணற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர் இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து புஷ்பலதாவிடம் விசாரித்த போது குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது.
தாய் கைது
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, 2 குழந்தைகளின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து புஷ்பலதாவை கைது செய்தனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21-ந்தேதி கண்ணமங்கலத்தில் வலிப்பு நோயால் அவதிப்பட்ட சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து கழுத்ைத பிடித்து அழுத்தி, தாயே கொலை செய்த சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் 2 குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.