பந்தலூர் அருகே தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
பந்தலூர் அருகே தொழிலாளியின் வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள தேவாலா, வாளவயல் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இங்கு காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் வாளவயல் கண்ணாகடை பகுதிக்குள் 2 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் காட்டு யானைகள் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மகாலிங்கம் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவாலா வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.