நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் போலீசார் திடீர் சோதனை
தேனி மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
உத்தமபாளையம்:
பொதுவினியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படுகிற ரேஷன் பொருட்களை கடத்தலை தடுக்கும் வகையில், நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் சோதனை நடத்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாதேவி, பழனிசாமி ஆகியோர் தேனி மாவட்டத்தில் அனைத்து கிட்டங்களிலும் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உள்ள கிட்டங்கிகளுக்கு சென்ற போலீசார் அங்குள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரத்தை கேட்டறிந்தனர். கிட்டங்கிகளில் இருந்து ரேஷன்கடைகளுக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.
மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.