மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவர்கள் முற்றுகை

கொரோனா பணியில் ஈடுபட்ட 80 ஆட்டோக்களுக்கு ரூ.15 லட்சம் வாடகை பாக்கி உள்ளது என்றும், அந்த வாடகையை உடனே வழங்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்

Update: 2021-06-22 04:40 GMT
80 ஆட்டோக்களுக்கு ரூ.15 லட்சம் வாடகை பாக்கி:
மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவர்கள் முற்றுகை
கொரோனா பணிக்கான வாடகையை உடனே வழங்க வலியுறுத்தல்
சேலம், ஜூன்.22-
கொரோனா பணியில் ஈடுபட்ட 80 ஆட்டோக்களுக்கு ரூ.15 லட்சம் வாடகை பாக்கி உள்ளது என்றும், அந்த வாடகையை உடனே வழங்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
ஆட்டோ வாடகை
சேலம் மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக வாடகைக்கு ஆட்டோக்கள் எடுத்து அதன்மூலம் வீதி, வீதியாக சென்று கொரோனா பரிசோதனையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 60 வார்டுகளிலும் கொரோனா பரிசோதனைக்காக 80 ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டன.
இதற்காக ஒரு ஆட்டோவுக்கு தினமும் ரூ.1000-ம் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக தெரிகிறது. 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ஆட்டோக்களுக்கு வாடகை கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
டிரைவர்கள் முற்றுகை
எனவே ஆட்டோக்களுக்கு வாடகை தொகையை உடனே வழங்க வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் நேற்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆட்டோ டிரைவருக்கும் ரூ.20 ஆயிரம் வீதம், 80 ஆட்டோக்களுக்கு ரூ.15 லட்சத்திற்கு மேலாக வாடகை வழங்கப்படவில்லை. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு இந்த வாடகை பணத்தை தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆட்டோ டிரைவர்களுக்கு வாடகை தொகை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்