சேலத்தில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

ஊரடங்கில் தளர்வுகள் இல்லாத போதிலும் சேலத்தில் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

Update: 2021-06-22 04:39 GMT
சேலம்
ஊரடங்கில் தளர்வுகள் இல்லாத போதிலும் சேலத்தில் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
நோய் தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை சுமார் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கு 1,380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நோய் தொற்று குறையாத காரணத்தால் வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி, கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட மேலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பொதுமக்கள் அரசு கூறும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதுவே நோய் தொற்று குறையாமல் இருப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
போக்குவரத்து அதிகரிப்பு
சேலம் மாநகரில் நேற்று காலை வழக்கத்தைவிட சாலையில் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக 5 ரோடு, 4 ரோடு, கடைவீதி, அஸ்தம்பட்டி உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றன. இதை பார்க்கும்போது சேலத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டு விட்டது போன்று தெரிகிறது. 
மேலும் சேலம் கடைவீதியில் நேற்று பழங்கள் மற்றும் பூக்கள் வாங்குவதற்காக கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. உயிர்க்கொல்லி என்னும் கொரோனா தற்போது குறைந்து வரும் வேளையில் பொதுமக்கள் இதுபோன்று அலட்சியம் காட்டக்கூடாது என்றும், அரசு கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்