திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார். முதலில் பச்சிளங் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு, பொது வார்டுகளுக்கு சென்ற கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து ரத்த வங்கிக்கு சென்ற கலெக்டர் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அலுவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து கொரோனா சிகிச்சை வார்டுக்கு முழுகவச உடை அணிந்து சென்ற கலெக்டர் ஸ்ரேயா சிங் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் என்னென்ன குறைகள் உள்ளது என்று கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு உள்ளிட்டவைகளை அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
புகார்
இதனை தொடர்ந்து நோயாளிகளிடம் சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சை பிரிவு டாக்டர் சத்தியபானு தடுப்பூசி பிரிவு டாக்டர் மோகன பானு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டரின் திடீர் ஆய்வால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.