ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோ ரூ.16,400-க்கு ஏலம்

உலக தேயிலை தினத்தையொட்டி உற்பத்தி செய்யப்பட்ட ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோ ரூ.16,400-க்கு ஏலம் போனதாக குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-22 01:02 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பினர் நடத்தும் இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறது. 
 இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கு பெற்று தேயிலைத்தூளை ஏலம் எடுத்து வருகிறார்கள். 

கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி முதல் உலக தேயிலை தினம் இந்திய தேயிலை வாரியத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் இருந்து பறிக்க கூடிய பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் சிறப்பு தேயிலை ஏலமாக குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்படும்.

 இதேபோல இந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி உலக தேயிலை தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பறிக்கப்பட்ட பச்சை தேயிலை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூள் நேற்று குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

இதில் மொத்தம் 4 ஆயிரத்து 43 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 3 ஆயிரத்து 468 கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது.  விற்பனையான தேயிலைத்தூளின் சராசரி விலையாக கிலோவுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.224 வரை ஏலம் சென்றது. 

அதிகபட்சமாக ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்து 400-க்கு ஏலம் போனது.  இந்த தகவலை குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பின் தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்