ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி; புதிதாக 795 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 795 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 795 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக 795 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 891 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 795 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 453 ஆக உயர்ந்தது.
9 பேர் பலி
இதற்கிடையில் கொரோனாவுக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 64 வயது முதியவர் கடந்த 19-ந்தேதியும், ஈரோட்டில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர், 56 வயது பெண், 39 வயது பெண், 72 வயது முதியவர், 61 வயது முதியவர், 83 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தனர்.
மேலும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 53 வயது பெண் மற்றும் 68 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 555 ஆக உயர்ந்தது.
7,070 பேர் சிகிச்சை
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆயிரத்து 45 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 76 ஆயிரத்து 828 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 7 ஆயிரத்து 70 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.