போலீஸ்காரர் சரமாரி வெட்டிக்கொலை
நாகர்கோவிலில் போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய நண்பருக்கும் வெட்டு விழுந்தது. கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் தலைமறைவாகி விட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய நண்பருக்கும் வெட்டு விழுந்தது. கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் தலைமறைவாகி விட்டார்.
போலீஸ்காரர்
நாகா்கோவில் கலைநகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி ஸ்ரீமதி. இவர்களுடையே மகன் ஸ்ரீசரவணன் (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த சுஜி (32) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீவேல் (11) என்ற மகனும், ஸ்ரீதா (10) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக ஸ்ரீசரவணன் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். இந்தநிலையில் சில மாதங்களாக அவர் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரில் இருந்தார்.
வெட்டிக்கொலை
நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரஞ்சித் (34) என்பவர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீசரவணனை வெட்டினார். இதில் ஸ்ரீசரவணனுக்கு கையில் வெட்டுப்பட்டது. பின்னர் சுதாரித்து கொண்ட அவர், ரஞ்சித்தை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் ஸ்ரீசரவணன், அவரது நண்பர் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்த விக்ரம் துணையுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை முடிந்த பிறகு ஸ்ரீசரவணன், நண்பருடன் வீடுநோக்கி வந்தார். வீட்டை நெருங்கிய போது அங்கு மறைந்திருந்த ரஞ்சித் திடீரென ஸ்ரீசரவணன் மீது பாய்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த விக்ரமுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கொலைவெறி தாக்குதலை நடத்தி விட்டு ரஞ்சித் தப்பி ஓடி விட்டார். பலத்த காயமடைந்த ஸ்ரீசரவணன், அதே இடத்திலேயே சாய்ந்தார். உடனே உயிருக்கு போராடிய ஸ்ரீசரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிாிழந்தார். லேசான வெட்டுக்காயம் அடைந்த விக்ரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பு
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்்கட்ட விசாரணையில், ரஞ்சித் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனை ஸ்ரீசரவணன் தட்டிக்கேட்டது தொடர்பாக ரஞ்சித்துடன் முன்விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து ஸ்ரீசரவணன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரஞ்சித்தை வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.